‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday 8 November 2012

இகாமத்துக்குப் பின் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் வேறு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்றும், இகாமத் சொல்லப்படும் போது யாராவது சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொண்டிருந்தால் அதையும் விட்டுவிட வேண்டும் என்றும் சில உலமாக்கள் சட்டம் சொல்கின்றார்கள். இது தொடர்பாக தெளிவான நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் (1281))
 
மேற்கண்ட செய்தியை அடிப்படையாக வைத்துத் தான் குறிப்பிட்ட சட்டத்தை சொல்கின்றார்கள்.ஆனால் உண்மையில் குறிப்பிட்ட ஹதீஸ் சொல்லும் செய்தி என்ன?
 
இகாமத் சொல்லப்பட்ட பின்பு கடமையல்லாத வேறு எந்தத் தொழுகையையும் ஆரம்பிக்கக் கூடாது என்பதே மேற்கண்ட செய்தியின் கருத்தாகும்.
இகாமத் என்பது கடமையான தொழுகைக்குரிய அழைப்பாகும். இந்த அழைப்பு விடப்பட்டால் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதே முறையான செயல். இந்த அழைப்புக்குப் பிறகு உபரியான வணக்கத்தில் ஈடுபட்டால் கடமையான தொழுகையை அலட்சியம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
 
நாம் பள்ளிக்கு வரும் போது இகாமத் சொல்லப்பட்டால் முன் சுன்னத் தஹிய்யதுல் மஸ்ஜித் உள்ளிட்ட எந்தத் தொழுகையிலும் ஈடுபடாமல் ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருளாகும்.
 
இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
 
ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.
 
தொழுகையின் ஆரம்பம் தக்பீர் ஆகும். கடைசி ஸலாம் ஆகும். (திர்மிதி – 03)
 
ஒரு தொழுகையை துவக்கி விட்டால் அதை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்துத் தான் முடிக்க வேண்டும். இடையில் முடிக்கக் கூடாது. என்பதே மேற்கண்ட செய்தி சொல்லும் தகவலாகும். இந்த அடிப்படையில் ஒருவர் சுன்னத்தான தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால் குறிப்பிட்ட தொழுகைகை முழமையாக தொழுது முடித்த பின்னர் தான் கடமையான தொழுகையில் இணைந்து கொள்ள வேண்டும். அதுவல்லாமல் இடையில் தொழுகையை முறிக்கக் கூடாது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers