‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 14 November 2012

பாறைக்குள் வேரைப்போலே...

அரேபிய தீப கற்பத்தில் குறைஷி கோத்திரம் உயர்ந்த கோத்திரமாக காணப்பட்டது.இவர்களின் காலப்பகுதி ஜாஹிலிய மௌடீக காலப்பகுதியாக இஸ்லாமும் வரலாறும் சொல்கின்றது. ஆனால் இவர்களிடம் வியாபாரம் சிறந்து காணப்பட்டது. அதனால் மிதமிஞ்சிய பொருளாதாரம் இவர்களிடம் மேலோங்கியது. இவர்களின் சமூக நிலை ஓரளவு சிறந்திருந்தாலும் மார்க்கம் என்பது மிகவும் சீரழிந்தே காணப்பட்டது.
தமது மூதாதையர் மார்கத்தை பின்பற்றுவதில் இவர்களுக்கு அவ்வளவு அலாதிப்பிரியம். சிலை வணக்கத்தில் மூழ்கி கிடந்தனர். லாத், உஸ்ஸா போன்ற சிலைகளை கடவுளாக கொண்டனர். கோத்திர ஒற்றுமை இவர்களின் பலம். இந்த சமுதாயத்தில்தான் முஹம்மத் நபி ஸல் நபி ஸல் பிறக்கின்றார்.சிறுவயதிலே தாயை தந்தையை இழந்த இவர் தனது பாட்டனாரின் அரவணைப்பில் அன்பு ஆதரவாக வளர்ந்தார். அந்த சமூகத்தில் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்று புகழப்பட்டார்.
திடீரென்று இவர் நிலை மாற்றம் அடைகிறது. அன்பு காட்டி வந்த இந்த மக்களே இவரை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். நம்பிக்கையாளர் உண்மையாளர் என்று சொன்ன அதே சமுதாயம் இவரின் நம்பக தன்மையை மக்களில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறது. இவருக்கு எதிராக கூட்டங்களும் சதிகளும் நடந்தவண்ணம் இருந்தது .
இந்த கெடுபிடிகளுக்கு காரணம் இந்த முஹம்மத் நபி (ஸல்) தான். அப்படி அவர் என்ன செய்தார் புகழப்பட்ட வாயாலேயே இகழப்பட காரணம் என்ன ?
காரணம்....
அந்த மக்களின் உள்ளத்தில் ஊறிப்போன ஜாஹிலிய வழிகெட்ட கொள்கையை இவர் மறுத்தார், அந்த இடத்தில் லாயிலாக இல்லல்லாஹு என்ற உயர்ந்த கலிமாவின் உன்னதத்தை அந்த சமூகத்தில் விதைக்க எத்தனித்தார், தவ்ஹீதை அந்த மக்களுக்கு போதித்தார்.
இதுதான் இவர் செய்த தவறு. இவரின் கொள்கையை ஏற்கின்றவர்கள் சொல்லாலும் கல்லாலும் அடிக்கப்பட்டு வந்தனர். வதைக்கப்பட்டு வந்தனர். யாசிர், சுமைய்யா,  பிலால் ரலி போன்றவர்கள் மிகவும் துன்புறுத்தபட்டனர். கொல்லப்பட்டனர்,
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுகொண்டவர்களின் பால் காபிர்களின் கெடுபிடி முடுக்கிவிடபட்டதும் ஹிஜ்ரத் என்ற உன்னத பயணம் இவர்களுக்கு தவிர்க்க முடியாதது ஆனது. முதலில் ஹபஷா என்ற கிறிஸ்தவ நாட்டின் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு அங்கு தமது மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்ய முற்ப்பட்டனர். அதுகூட நீடிக்கவில்லை.
சிறிது காலத்தில் மதீனாவுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரத் பயணம் சரித்திரம் படைத்தது. மதீனா வாசிகள் மக்கத்து வீரர்களை வரவேற்க மதீனா என்ற இஸ்லாமிய தேசம் மலர்ந்தது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்க பட்டது. இஸ்லாமிய அரசின் எல்லைக்குள் சிறுபான்மை மக்கள் ஒப்பந்தத்துக்குள் உள்வாங்க பட்டனர். இந்த தவ்ஹீதை காக்க அன்சாரிஈன்கள் முஹாஜிரீன்கள் உயிரையும் அற்பமாக கருதினர். தியாகங்கள் ஊடாக இஸ்லாம் வளர்ந்தது. இரும்பு நெஞ்சம் கொண்ட உமர் ரலி, காலித் பின் வலீத் ரலி போன்றவர்களின் உள்ளத்திலும் இஸ்லாம் மிகவும் உன்னதமாக ஊடுருவியது. இஸ்லாத்துக்கு எதிராக இரண்டு யுத்தங்களில் கலந்துகொண்ட காலித் பின் வலீதின் உள்ளத்திலும் இஸ்லாம் சங்கமித்தது. இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் காவலராக மாறினர். தியாகம், பொறுமை, தாவாவில் தொய்வின்மை, எதிரிக்கு அஞ்சாத நெஞ்சம்  போன்ற உன்னத குணங்களால் இஸ்லாம் மிகப்பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது .
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆரம்பகால தியாகிகளின் வரலாற்றை இந்த கட்டுரைக்குள்ளே சுருக்கிவிட முடியாது.
வரலாற்றை ஆரம்பித்து வைத்த இவர்கள் விருட்சமாக வளர்ந்த மரத்தின் வேர் போன்றவர்கள். இந்த வரிசையில் பல தியாகிகள் இஸ்லாத்துக்காக தியாகம் செய்து வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணமுடியும்.
இந்த தியாக வேர்களை வாசிக்க விழுதுகளும் பின் தொடராமல் இல்லை. அந்த வரிசையில் ஹிஜ்ரி ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமூகத்தில் அனாச்சாரம் பரவிக்கிடந்தது. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட கொள்கைகள் தோன்றி இஸ்லாத்தை நாசமாக்க ஆரம்பித்தன. இந்த சமுதாயத்தின் உள்ளத்திலும் ஜாஹிலிய தன்மைகள் அதிகம் காணப்பட்டது .
இதை இல்லாது ஒழிக்க தியாகத்தையும், பொறுமையையும் பண்பாக கொண்ட ஒரு மனிதர் அன்றைய திமஸ்கில் உருவாக்கினார். இவர் தனது சிறு வயது முதல் இஸ்லாமிய கலைகளை அக்குவேறு ஆணிவேராக கற்க ஆரம்பித்தார். அல் குரானை மனனம் செய்தார்.  இஸ்லாமிய சமுதாயத்தில் பரவிக்கிடந்த இணைவைப்பு, பித்அதகளை ஒழிக்கிக்கும் உன்னத பணியை ஆரம்பித்தார். தவ்ஹீதை நிலைநாட்ட பாடுபட்ட மனிதர்கள் பல இன்னல்களை அடைந்தனர் என்பதற்கு இவரும் மிக முக்கியமான எடுத்துகாட்டாகும். பல துறைகளில் கரை கண்டார் அதை மனித சமுதாயத்துக்கு எத்திவைக்கும் பணியை அயராது தொடந்தார் .
அவர்தான் பேரறிஞர் இப்னு தைமியா ஆவார். இவரின் தாவா நகர்வுகளில் பல தடைக்கல்களை எதிர்கொண்டார். அவ்லியாக்களின் கபுர்களில் தேவைகளை கேட்க முடியும் என்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்ட அறிஞர்களால் சோதனைக்கு உட்படுத்தபட்டார். சிறைவாசம்  அனுபவித்தார். இஸ்லாத்துக்குள் மட்டுமல்ல அதற்கு வெளியில் இருந்து வந்த தாத்தார் களுக்கு எதிராக ஆயுத யுத்தம் செய்யும் அணிக்கு தலைமை தாங்கினர்.
தாவா களத்தில் மட்டுமல்லாது யுத்த களத்திலும் சமகாலத்தில் பங்களிப்பு செய்த வரலாற்று மனிதர்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தியாகிகளில் இவரும் ஒருவர் என்பதற்கு இவர் விட்டு சென்ற ஆய்வுகளும் ,நூல்களும் ஆதாரமாகும்.
இப்னு தைமியாவின் சிந்தனை, சொல்நெறிகளில் மனித சமுதாயத்தின் தலைவிதி மாறியமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. சத்திய கொள்கைகளை ஏற்க மறுக்கும் உள்ளங்களில் இஸ்லாம் குடிகொள்ள இவரின் வழுவான ஆய்வுகளும், நூல்களும், துணிவான வாதங்களும் களம் அமைத்து கொடுத்தன. அகீதா, தப்சீர், ஹதீஸ் கலை உசூலுல்,பிக்ஹ, மெய்யியல், வரலாறு, இலக்கியம், இலக்கணம்,ன்அணி இலக்கணம் போன்ற இன்னோரன்ன துறைகளில் துறைசார்ந்து காணப்பட்டார்.
மக்களை மாற்றியமைத்த தனிமனித ஆளுமை கொண்ட அறிஞர்கள் வரிசையில் இப்னு தைமியாவுக்கு ஈடுகொடுக்க கடந்த சில நூற்றாண்டுகளில் எவரும் இல்லை என்பது மறுக்க முடியாத ஒன்றே.மாற்றம் தேடி மக்கள் மனதில் வேரூன்டியவர்களில் இப்னு தைமியா ஒரு சகாப்தம் என்பது மிகையாகாது.
இதே அடிப்படையில் ஹிஜ்ரி பதின்மூன்றாம் நூற்றாண்டில் அரேபிய தீப கற்பம் மீண்டும் ஜாஹிலிய பண்புகளை சுமந்து செல்ல ஆரம்பித்தது. அங்கு கப்ர் வணக்கம், பித்அத் வழிகேடுகள் பரவிக்கிடந்தது. இந்த வழிகேடுகளை புரட்சிகரமான தாவா மூலம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் காலம் தேவைக்குள்ளானது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற தியாக செம்மல். இவரின் தனி மனித ஆளுமை, வழிகெட்ட கொள்கைக்கான மறுப்புகள், துணிவான தாவா கள நிலை, நேர்த்தியான தாவா நகர்வு அரேபிய தீப கற்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது அல்லாமல் பிராந்திய நாடுகளின் ஊடாக உலக வரைபடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைந்தது. ஜாஹிலிய காலத்தில் சிலைகளை வணங்குவதும் நாகரீக காலத்தில் கபுர்களை வணங்குவதும் ஒன்று என்ற உன்னத தாவாவை இஸ்லாமிய உள்ளத்தில் ஆழமாக பதிந்தவர் பேரறிஞர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்.
கிலாபத் மூலம் ஏற்படுத்தப்பட்ட கப்ர் வணக்க அனாச்சாரங்களை தடம் இன்றி அழித்தொழித்த சாதனை வீரர் இவர். இந்த வழிகேடுகளை ஒழிக்க இவருக்கு மிகப்பெரும் கட்சி தேவைப்படவில்லை, ஆட்சி தேவைப்படவில்லை, இஸ்லாத்தின் பெயரில் சமரசம் தேவைப்படவில்லை, கோபப்பார்வை பார்க்க வேண்டிய இடத்தில் கோபப்பார்வை, அன்பு காட்டவேண்டிய இடத்தில் அன்பு, நேர்த்தியான தாவா நகர்வு போன்ற இவரின் தாவா அணிகலன்கள் தவ்ஹீதின் வெற்றிக்கு அடித்தளமாகியது. வழிகேட்டில் ஊறிப்போன மக்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஒளியை ஏற்படுத்த காரணமான முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தாவா புரட்சி தாயிகளுக்கு முன்னுதாரணமாகும்.
கடந்த கால வரலாற்று தொடர்கதையில் நிகழ்கால கதாபாத்திரம்தான் தமிழ் நாட்டின் கிராமத்து கதாபாத்திரம். ஏழ்மையான குடும்பம்,வறுமையிலும் தன்மானம், பயான் நிகழ்ச்சிக்கு காசு வாங்கும் உலமாக்களில் இவர் புறநடை அஞ்சாத நெஞ்சம் கொண்டவர், கொலை முயற்சிகளை கடந்தவர், சமுதாய அக்கரையில் அப்படி ஒரு அலாதி இவருக்கு. மாற்று கருத்து கொண்ட சமுதாயம் என்றாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க போராட்டம் செய்பவர். அரபு கதாபத்திரங்களை விட இவர் கொஞ்சம் அந்நியப்படுகிறார். பிறரால் அந்நியப்படுத்தபட்டார்.
தனது கரத்தால் தொழில் செய்து வாழ்பவர். இன்று தாவாவின் பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு அறைக்குள் இருந்து அறிக்கை விடும் தாயிகளுக்கு மத்தியில் இவர் சாணாக்கியமானவர். ஹதீஸ் கலையை தேவைக்கு ஏற்ப விளங்கி வைத்துள்ளார். உசூலுல் பிக்ஹ கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளார். சட்டங்கள் எடுக்கும் கலையில் கரை கண்ட ஒருவராக காட்சி தருகிறார். தாவாவை இவர் இரண்டாக பிரிக்கின்றார் ஒன்று மாற்றுமத தாவா, இன்னொன்று இஸ்லாமியர்களுக்குள் தாவா .
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி இவர் தமிழ் உலகில் செய்த மாபெரும் புரட்சியாகும். மாற்றுமதத்தவர்களும் முஸ்லிம்களும் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை தமிழ் உலகுக்கு மட்டும் இல்லாமல் உருது, ஆங்கில, சிங்கள உலகுக்கும் சொல்லி வருகிறார்.
இவர் எழுதிய "மாமனிதர் நபிகள் நாயகம் "நூல் அரபிகளால் கூட புகழப்பட்ட நூலாகும். இவரை பற்றிய வாழ்க்கை வரலாறு இந்தியாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு நூலாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
இவர்தான் பேரறிஞர் பி ஜெயினுலாப்தீன். அவசியப்பட்ட தமிழ் இஸ்லாமியச் சூழல் விவாதங்களையும், உரையாடல்களையும் பீஜேயோடு அடியொட்டி வார்த்தெடுக்கப்பட்ட அனுபவங்களாய் இன்றளவும் எம் உளப்பதிவேடுகளில் பிரதியெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பீஜே யினால் நிகழ்த்தப்பட்ட விவாதங்களாகட்டும், வினா விடைகளாகட்டும், அத்தனையும், ஆரோக்கிய அட்டையுடனும், அம்சமான குண நலத்துடனும், செறிந்த சிந்தனைத் தகவல் பெட்டகமாக உலகெங்கும் வலம் வருவது தமிழ் உலகத்துக்கு மாபெரும் அறிவுப்புரட்சியை ஏற்படுத்த ஏதுவானது .
கபுர்வணக்கம், பித்அத வழிகேடுகள் பற்றிய தெளிவை சமூகத்தில் விதைத்தார். அதனால் இவர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார். இஸ்லாத்தின் எதிரியாக மக்களிடம் விளம்பர படுத்தபட்டார். மார்க்க விடயங்கள் மட்டுமல்ல சமூக, அரசியல் சார்ந்த துறைகளிலும் செவ்வனே செயற்பட்டார். இவரை ஒதுக்கிய சமுதாயமே இவரின் இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதனூடாக மாபெரும் சமுதாய புரட்சி வெடிப்பை ஏற்படுத்த காரணமானார். சமுதாய மாற்றத்தில் இவர் கையாண்ட யுக்திகள் மதிநுட்பம் மிக்கவை. ஆளுமை மிக்க பிரச்சாரம், அழகிய உரையாடல், விவாதங்கள், நூல்கள் இணையதள தாவா, கேள்வி பதில் போன்ற இன்னோரன்ன வழிமுறை கள் இவரின் தாவா வெற்றிக்கு காரணிகளாகும்.
ஒரு சமுதாயத்தில் வழிகெட்ட கொள்கைகள் புரையோடி காணப்படும் காலங்களில் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் உன்னத தாவா நகர்வை நான் இங்கு பாறைக்குள் கூட வேர் ஊடுருந்து செல்வதுபோன்ற நிலைக்கு உதாரணமாக கருதுகிறேன்.
பாறையை பிளக்க கனரக ஆயுதம் தேவை. அதை உடைக்க மனிதன் பல ஆயுதங்களை உபயோகிக்கின்றான். அதே  நேரம் சாதாரண மரத்தின் அல்லது செடியின் வேர் அந்த பாறையைக்கூட பிளந்துவிடும் வல்லமையை பெற்றுள்ளது.
இப்படியான தாவா நகர்வுகளை தயக்கம் இன்றி செய்த இஸ்லாமிய தியாகிகளில் முஹம்மது நபி ஸல் அவர்கள் முதல் இப்னு தைமியா, முஹம்மத் பிப் அப்துல் வஹ்ஹாப், பி ஜெயினுலாப்தீன் ஆகியோரை இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன் இவர்கள் தமது தாவாவில் வெற்றியும் கண்டனர். வழிகேட்டில் இறுகிப்போன சமுதாய உள்ளங்களில் "பாறைக்குள் வேரைப்போல்" ஊடுருவி குணத்தில் குன்றாக  வரலாற்றில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் பலர் இருக்கவும் முடியும் என்பதை மறுக்கவும் முடியாது.
 
நன்றி
 
ஆக்கியோன்: அஹ்மத் ஜம்ஷாத்(கெய்ரோ)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers