‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Friday 21 September 2012

மரணமும் - மறுமை சிந்தனையும்

மரணம்!

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே…! ‘ (அல்குர்ஆன் -(சூரத்துல் அன்பியா)21:35)

‘ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவணையுண்டு. அவர்களது தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் ‘. (அல்குர்ஆன் – (சூரத்துல் யூனுஸ்) 10:49)
‘ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்’ (அல்குர்ஆன் (சூரத்துல் அஃராஃப்) 7:34)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் நாம் இருந்தாலும் மரணம் நிச்சயம்.

‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே! ‘ (அல்குர்ஆன் – (சூரத்துன்னிஸா) 4:78)

அல்லாஹ்வின் தூதர் நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(முறையற்ற) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் ‘. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: திர்மிதி 2229)

‘ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் (நற்காரியங்கள் செய்வதற்காக) ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள்ளுங்கள். (ஆதாரம் : ஹாகிம்)

மரணத்திற்கு முன் வாழ்வையும்,
நோய்வருமுன் ஆரோக்கியத்தையும்,
பணிச்சுமை வருமுன் ஓய்வையும்,
வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும்,
ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்ளுங்கள்
கப்ருடைய வாழ்க்கை!

மரணத் தருவாயில் மனிதனின் நிலை!

மனிதனுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வுகளை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் இறங்கி, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறுவார்கள்)’
(அல் குர்ஆன் 41:30)

‘(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே! ‘
(அல் குர்ஆன்: 8:50)

மேற்கண்ட வசனங்கள் ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பதை தெளிவுப்படுத்துகின்றன.

உண்மையை உணர்ந்தபின், தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக தீய மனிதன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்?

‘உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’ என்று கூறுவான். ஆனால் அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் – நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான் ‘
(அல் குர்ஆன் 63:9,10)

‘அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெற்று வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு தடுப்பு இருக்கிறது’
(அல் குர்ஆன் 23:99-100)

எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் காணும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை. தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனை சந்திக்க வேண்டியவனாக அவன் இருக்கிறான்.

மரணத் தருவாயில` தீயோரின் நிலை!

தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. தீயவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள். பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல், உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார். பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.

இறுதியாக அவன் கீழ் வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன 7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

’இறந்தவர் கெட்டவராக இருந்தால் தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறந்தவரின் உடல் (எடுத்து செல்ல தயாராக) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் ‘.
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

மரணத் தருவாயில் நல்லோரின் நிலை!

நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் அவர்களிடம கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

‘அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! ‘ (என்று அல்லாஹ் கூறுவான்) (அல்குர்ஆன்: 89 : 27)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் ‘ என்று கூறுவார். தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அந்த வானவர் அதை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும்இ கண்ணியமிக்க அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி கூறுவான். எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனில் பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;…! ‘ (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அதுவல்ல, மாறாக இறை நம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்)இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப்பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்’. (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)

‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபீ (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.

(அந்த இரு வானவர்கள்) முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி: 991)

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது!

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. நபீத் தோழர்களில் நபீயவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் கப்ரு வாழ்க்கை நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதரின் (ஸஃது (ரலி)) மரணத்தால் தான் அர்ஷு குலுங்கியது . அவருக்காக வானங்களின் கதவுகள் திறக்கப்பட்டன . அவருடைய ஜனாஸா தொழுகையில் எழுபதாயிரம் மலக்குகள் ஆஜரானார்கள். நிச்சயமாக அவரும் கப்ரில் ஒரு முறை நெருக்கப்பட்டார். பின்னர் அது அவருக்காக விசலமாக்கப்பட்டது. (ஆதாரம்: நஸாயீ : 2028)

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

‘பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகிறார்கள். மறுமை நாளிலோ பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)’ (அல்குர்ஆன்: 40: 45-46)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரீ: 1379)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) ஆதாரம்: புகாரீ: 1375)

கப்ரு வேதனை சிறிய பாவங்களாலும் ஏற்படுகிறது

இரு கப்ருகளைக் கடந்து நபீ(ஸல்) அவர்கள் சென்றபோது, இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்: ஆனால் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர்;இ மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர் எனக் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி:1378)

கப்ர் வேதனைகளிலிருந்து பாதுகாப்பு!

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) நபீயவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபீயவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள். ‘அதன் பின்னர் நபீயவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடாமலிருக்க நான் கண்டதில்லை’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்:920)

நபீ(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடாமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

அல்லாஹும்ம இன்னி அவுது பிக மின் அதாபில் கப்ர். வமின் அதாபின்னார். வமின் ஃபித்னதில் மஹ்ய வல்மமாதஇ வமின் ஃபித்னதி மஸீஹித் தஜ்ஜால்.

‘அல்லாஹ்வே! நிச்சயமாக நான் கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வெளிப்படுவதால்; ஏற்படக்கூடிய சோதைனை’ ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி: 1377 முஸ்லிம்:924)

கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். கப்ருடைய வேதனையிலிருந்து நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரி வருவோமாக!

மறுமையில் மனிதனின் நிலை

மறுமை நாள்

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் – அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது.(உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (அல்-குர்ஆன்:42:47)

மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். (அல்-குர்ஆன்:36:51)

ஸூர்(எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். (அல்-குர்ஆன் 78:18)

அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. (அல்-குர்ஆன் 69:18)

மறுமைநாளில் நல்லோரின் நிலை

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(துவந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்-குர்ஆன் 16:111)

(அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். (அல்-குர்ஆன் 50:31)

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (அல்-குர்ஆன் 75:22,23)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ : 1423)

நீதியை நிலை நாட்டும் தலைவர்,
அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,
அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர்,
தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’
மறுமைநாளில் தீயோரின் நிலை

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம். (அல்-குர்ஆன் 20:102)

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. அந்நாளில் (தப்பிக்க) எங்கு விரண்டோடுவது?’ என்று மனிதன் கேட்பான்.அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (அல்-குர்ஆன் 74:9,3)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். (அல்-குர்ஆன் 24:24)

அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) காரணங்கள் ஒரு பயனும் தராது, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது. (அல்-குர்ஆன் 30:57)

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ஆ…கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.
(அல்-குர்ஆன் 33:66)

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான். (அல்-குர்ஆன் 25:27)

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர். (அல்-குர்ஆன் 42:22)

நபீ(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன்.
மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன்’ என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன்’ (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி விற்றவன்) ஆவான்.
நபீ(ஸல்)அவர்கள் இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…’ என்னும் இந்த(திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ : 2358)

ஆகவே நம்முடைய செயல்களை நாம் தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து, மரணிக்க பிரார்த்திப்போம். நமக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் நம்முடைய நம்பிக்கைகளையும், செயல்களையும் குர்ஆன், நபிவழியின் அடிப்படையில் சீர்திருத்திக் கொள்வோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers