‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Friday 31 August 2012

பெயர்தாங்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!

அன்றாட வாழ்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது. அது தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தாங்க போகும் வரை மட்டுமல்ல இடையில் தீய கனவுகள் போன்றவற்றால் எழுந்திருக்க நேரிட்டால் அப்போதும் கூட நாம் என்ன செய்ய வேண்டும் என தூய இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட இணையற்ற இறைவனால் அருளப்பட்ட இந்த மார்க்கத்தில் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு என சொல்லப்படாத எந்த ஒரு அம்சமும் இல்லை. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் இன்று எத்தனை பேர் இந்த அற்புதமான வாழ்க்கை நெறிமுறையை விளங்கி வைத்திருக்கிறோம். மிக மிக குறைவு. நாம் அனைவரும் நம்மை அறிவு ஜீவிகளாக தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதில் காட்டும் முனைப்பு மார்க்கத்தை அறிவதில் காட்டுவதில்லை.
இன்று முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாமல் குறைந்த பட்சம் அதன் அடிப்படைக்கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வேதனைப்படக் கூடிய விஷயம். இவர்களிடம் போய் மறுமையை பற்றி பேசினால் இவர்கள் சாதரணமாக சொல்கிறார்கள். இந்த உலகத்திலேயே பல பிரச்சனைகள் இதில் மறுமையை பற்றி பேச வந்துவிட்டார்கள் என்று. நிறைய முஸ்லிம்கள் மற்ற மதத்தை போலவே இஸ்லாத்தையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். இதனை பல முஸ்லிம்கள் நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாமல் இருந்து விடுவதையும் பார்க்கிறோம்.

எனக்கு தெரிந்த முஸ்லிம் ஒருவர் சொல்கிறார் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கருத்தைதானே சொல்கிறார். அதனை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை என்று. ஒரு முஸ்லிம் எப்படி இவ்வாறு இருக்க முடியும். இதுபோல எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் அல்குர்ஆனை ஓதுவதில்லை என்பது மட்டுமல்ல அதனை தொடுவதே இல்லை என்பதே. அப்படியே ஓதினாலும் அரபியில் மட்டும் ஓதிவிட்டு அல்குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்று பல பேர் பார்ப்பதில்லை. பல போலி மார்க்க அறிஞர்கள்??? இறந்தவர் வீட்டில் ஓதுவதற்காகவும் தங்கள் வயிற்று பிழைப்பிற்காகவும் இந்த குர்ஆனை வைத்திருக் கின்றனர். இவர்களுடைய பயான்களையெல்லாம் கேட்டால் முழுக்க முழுக்க தங்கள் தொழிலுக்கு ஆதரவாகவே இருப்பதை காணலாம். இவர்களுடைய இந்த பயானால் முஸ்லிம்களுக்கு இறையச்சமோ மறுமைப் பற்றிய பயமோ வேறெந்த நன்மையுமோ இல்லை. வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு மட்டுமே தொழக் கூடியவர்கள் என்று சில பேர் இல்லை பல பேர் உள்ளார்கள். அதுவும் இவர்கள் தொழ ஆரம்பிப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னதாகத்தான் வருவார்கள். இவர்கள் இவ்வாறு வருவதற்கு காரணம் இதுதான் போல. அல்லாஹ் தான் அறிவான்.

இன்றைய காலத்தில் மட்டுமல்ல பல நூறு வருடங்கள் பின்னால் சென்றால் கூட இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை பெரும்பாலான முஸ்லிம்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதைக் காணலாம். இதனை கண்டிக்க வேண்டிய ஆலிம்கள்? சொற்ப வருமானத்திற்காக சர்வ சாதரணமாக கண்டும் காணாமலும் அதனை ஊக்குவிப்பதையும் காணலாம். எத்தனையோ தலைமுறைகள் வாழ்ந்தார்கள். அவர்களின் நிலை என்ன இப்போது. அல்லாஹ்தான் அறிவான். அதுபோல தான் நம்முடைய தலைமுறையும் செல்லப் போகிறது முடிவில்லாத ஒரு நீண்ட பயணத்தை நோக்கி. அந்த பயணம் வெற்றி அடைய நாம் சேர்த்து வைத்து பின்பு இந்த உலகத்திலேயே விட்டுச் செல்கின்ற செல்வம் எந்த விதத்திலும் உதவாது. ஆனால் நம்மோடு ஒன்று மட்டும் தொடர்ந்து வரும். நம்முடைய எஞ்சியிருக்கின்ற அமல்கள்.

இந்த அமல்களும் நமக்கு பயன்பட வேண்டுமானால் நாம் மார்க்கத்தை சரியாக விளங்கி வைத்திருந்தால்தான் முடியும். சில முஸ்லிம்கள் சரியாக தொழுவார்கள் நோன்பு நோற்பார்கள், ஆனால்! ஹராமான தொழிலை செய்கிறார்கள் அதில் கிடைக்கும் இலாபம் அவரின் கண்ணை மறைக்கிறது.

அதுபோல மேலும் பல முஸ்லிம்கள் வட்டித் தொழில் செய்கிறார்கள், வாங்கிய கடனை கொடுக்காமல் மோசடி செய்கிறார்கள், புறம் பேசுகிறார்கள், சொத்தை பிரித்துக் கொடுப்பதில் மோசடி செய்கிறார்கள், மற்றவர்களின் சொத்தை சாதரணமாக அபகரிக்கிறார்கள், திருமணம் என்ற பெயரில் வரதட்சணை வாங்குகிறார்கள், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பொருளாதாரத்தை வீணடிக்கிறார்கள், இறந்தவர்களை வைத்து பாத்திஹா ஓதுகிறார்கள், செய்வினை சூனியம் என்ற பெயரில் மக்களை மூடனாக்கி அவர்களின் சொத்தை சுரண்டுகிறார்கள், இறைவனுக்கு இணைவைக்கிறார்கள், பித்அத்தான காரியங்களை செய்கிறார்கள், சினிமா சீரியல்களில் சிக்கி சீரழிகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள், மார்க்கத்தைப் பயன்படுத்தி யார் ஒரு அமைப்பை தோற்றுவித்தாலும் அதன் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்கிறார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்க மறுக்கிறார்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கிறார்கள், பெற்றோர்களை முறையாக கவனிப்பதில்லை, கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் இதுபோல அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்லப் போனால் பெயர் தாங்கி முஸ்லிம்களாகவே வாழ்கின்றனர். நீதி நேர்மை நாணயம் என்பதெல்லாம் பழங்கால நாணயத்தைபோல் மதிப்பில்லாமல் ஆகிவிட்டது.

நம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது. பாத்திஹா மௌலிது இவைகளை வருடத்திற்கு ஒருமுறை ஓதினால் போதும் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயமே உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து திருந்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு கேடுதான்.

ஆலிம்களை நம்பி மோசம் போகாதீர்கள். இந்த ஆலிம்கள்  தாங்களும் திருந்த மாட்டார்கள். நம்மையும் திருத்த மாட்டார்கள். இவர்கள் பிழைப்புக்காகவும் பெருமைக்காகவும் தான் ஓதுகிறார்கள். நாம் தான் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். எனவே அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரட்டுங்கள். மார்க்கத்தை சுலபமாக அறிந்து கொள்ளுங்கள். இன்று எவ்வளவோ  நூல்களும் வந்துவிட்டன. அவற்றை படியுங்கள்.

மனிதர்களில் முஸ்லிம்களாக பிறந்தது அல்லாஹ்வின் உதவியால் மட்டுமே நமக்கு இதில் எந்த பங்கும் இல்லை. நம்முடைய பங்கு நாம் தூய இஸ்லாத்தை கடைப்பிடித்து உண்மை முஸ்லிம்களாக வாழ்வது மட்டுமே. இப்போது இருப்பதுபோலவே இனியும் உங்கள் நிலை தொடருமானால் பிறப்பால் மட்டுமே உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு முஸ்லிம் களுக்கும் கடமைகள் உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ளன. பேணிக் கொள்வோம். வெற்றி பெறுவோம். இம்மையிலும் மறுமையிலும்.

இந்த கட்டுரையை படித்து விட்டு செல்லும் சகோதரர்களே இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers